போரும் ருஷ்ய சமூக ஜனநாயகமும்
லெனின்
அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் முதலாளித்துவக் கட்சிகளும் பல பத்தாண்டுகளாக, ஆயத்தம் செய்து வந்த ஐரோப்பியப் போர் மூண்டு விட்டது. ஆயுத தளவாடங்களின் பெருக்கம், முன்னேற்றமடைந்த நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியின் மிக அண்மைக் கட்டமான ஏகாதிபத்தியக் கட்டத்தில் மார்க்கெட்டுகளுக்கான போராட்டம் தீவிரமடைதல் மற்றும் அதிகப் பிற்பட்டதான கிழக்கு ஐரோப்பிய முடியாட்சிகளின் அரசு வம்ச நலன்கள் ஆகியவை இந்தப் போரைத் தவிர்க்க முடியாத வகையில் கட்டாயம் ஏற்படுத்தியே தீரும், அவ்வாறு ஏற்படுத்தியுள்ளன. பிரதேசங்களைக் கவர்ந்து பறித்தல், பிற தேசங்களை அடிமைப்படுத்தல், போட்டியிடும் தேசங்களை நாசப்படுத்தல், அவற்றின் செல்வங்கைளைச் சூறையாடுதல், ருஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இதர நாடுகளின் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளிலிருந்து உழைக்கும் மக்கள் திரளின் கவனத்தைத் திசை திருப்புதல், தொழிலாளர்கள் ஒற்றுமையைக் குலைத்து, தேசியவாதத்தின் மூலம் அவர்களைப் பயனற்றவர்களாக்குதல், பாட்டாளி வர்க்கத்தினரின் புரட்சிகர இயக்கத்தைப் பலவீனத்தப்படுத்த அவர்களது முன்னணிப் படையினை அழித்தொழித்தல் இவையே தற்போதைய போரின் ஒரே மெய்யான உட்கிடை முக்கியத்துவம் மற்றும் குறிபொருள் ஆகும்.
போரின் மெய்யான கருத்தை வெளிப்படுத்துவதும், ஆளும் வர்க்கங்கள், நிலவுடைமையாளர்கள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தார் போரைத் தாங்கி ஆதரித்துப் பரப்பி வரும் பொய்மை, குதர்க்கம் மற்றும் "தேசபக்த" சொற்ஜாலத்தை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்துவதும் சமூக ஜனநாயகத்தின் முதன்மையான கடமையாகும்.
போராடுகிற தேசங்களின் ஒரு பிரிவுக்கு ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கம் தலைமை தாங்குகிறது. இது தாயகத்தையும் சுதந்திரத்தையும் நாகரிகத்தையும் பாதுகாப்பதற்கும் ஜாராட்சியால் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கும் பிற்போக்கு ஜாரிசத்தை அழிப்பதற்கும் நடைபெறும் போர் என்று உறுதியாகக் கூறி இம்முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தையும் உழைக்கும் மக்கள் திரளையும் ஏமாற்றுகிறது. ஆனால், இரண்டாம் வில்ஹெல்ம் தலைமையிலான பிரஷ்யன் ஜங்கர்களிடம் அஞ்சி அடிபணிந்து கிடக்கும் இந்த முதலாளித்துவ வர்க்கம் எப்போதுமே ஜாராட்சியின் மிகவும் விசுவாசமுள்ள நேச சக்தியாக, ருஷ்யாவின் தொழிலாளர், விவசாயிகளின் புரட்சிகர இயக்கத்தின் விரோதியாக இருந்து வந்துள்ளது என்பதே நடைமுறை உண்மை, உண்மையில் போரின் விளைவு எதுவாக இருப்பினும் சரி இந்த முதலாளித்துவ வர்க்கம் ஜங்கர்களுடன் சேர்ந்து ருஷ்யாவில் புரட்சிக்கு எதிராக ஜாரின் முடியாட்சிக்கு ஆதரவு தர சகல முயற்சிகளையும் மேற்கொள்வது திண்ணம்.
மெய்யாகவே, ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கம் செர்பியாவை எதிர்த்து ஒரு கொள்ளைக்காரப் போரைத் தொடுத்துள்ளது. அந்நாட்டை அடிமைப்படுத்துவதும் தெற்கத்திய ஸ்லாவ் மக்களின் தேசியப் புரட்சியினை நெரித்து நசுக்குவதும் அதே சமயம் மேலதிக சுதந்திர நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ் ஆகியவற்றை எதிர்த்துத் தமது ராணுவப் படைகளில் பெரும் பகுதியை அனுப்பி செல்வந்தப் போட்டியாளர்களைச் குறையாடுவதுமே அதன் செயல் இலக்கு உள்ளபடியே, தான் ஒரு தற்காப்புப் போரை நடத்துவதாக ஒரு கட்டுக் கதையினைப் பரப்பி வரும் ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கம் போருக்கு மிகவும் சாதகமான தருணம் என்று அது கருதிய நேரத்தைத் தேர்ந்து கொண்டது. தனது இராணுவ தளவாடங்களிலான மிகவும் நவீனமான மேம்பாடுகளைப் பயன்படுத்தியது. ருஷ்யாவும் பிரான்சும் ஏற்கெனவே திட்டமிட்டு முடிவு செய்திருந்த படைக்கலப் பெருக்கத்தை முன்னுணர்ந்து தடுத்தது.
போரிடும் நாடுகளின் இன்னொரு பிரிவுக்கு பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் தலைமை தாங்குகிறது. தமது நாடுகளைப் பாதுகாப்பதற்கும் சுதந்திரத்திற்கும் நாகரிகத்திற்குமாகவும் ஜெர்மன் இராணுவ வெறியையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்து போராடுவதாக உறுதி கூறி அவ்வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தையும் உழைக்கும் மக்கள் திரளையும் ஏமாற்றுகிறது. மெய்நடப்பில், இந்த முதலாளித்துவ வர்க்கம் ஐரோப்பாவிலேயே ஆகப் பிற்போக்கான, காட்டுமிராண்டித்தனமான முடியாட்சியான ருஷ்யன் ஜாராட்சியின் துருப்புகளைக் கூலிக்கமர்த்த நீண்ட காலமாக கோடிக்கணக்கான பணம் செலவிட்டு வந்துள்ளது. ஜெர்மனியைத் தாக்குவதற்கு அவற்றை ஆயத்தப்படுத்தி வந்துள்ளது.
பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் போராட்டம். ஜெர்மன் காலனிகளைக் கவர்ந்து பற்றுவதையும் அதிக விரைவான பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்த அந்தப் போட்டி தேசத்தை நாசப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த உன்னத நோக்கத்தில் நாட்டம் கொண்டு இந்த "முன்னேறிய", "ஜனநாயகத்" தேசங்கள் போலந்து, உக்ரேன் முதலியவற்றை மேலும் அதிகமாக நெருக்கி நசுக்கவும் ருஷ்யாவில் புரட்சியை மேலும் முற்று முழுக்க ஒடுக்கவும் வேண்டி மிருகத்தனமான ஜாராட்சிக்கு உதவுகின்றன.
பாழடிப்பதிலும், அட்டுழியங்கள் புரிவதிலும், போரில் வரம்பற்ற வன்கொடுமையிலும் போரிடும் பிரிவுகள் இரண்டும் ஒன்றுக்கொன்று குறைந்தவையல்ல. ஆயினும், பாட்டாளி வர்க்கத்தை ஏமாற்றவும் ஒரே மெய்யான விடுதலைப்போரான "சொந்த" நாட்டிலும் "அன்னிய” நாடுகளிலும் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்த உள்நாட்டுப் போரிலிருந்து பாட்டாளி வர்க்கத்தின் கவனத்தை திசை திருப்பவும் வேண்டி இத்தகைய உன்னது நோக்கத்தை அடைவதற்கு ஒவ்வொரு நாட்டிலுள்ள முதலாளித்துவ வர்க்கமும் தேசபக்தி பற்றிய பொய்மைச் சொற்றொடர்களின் உதவியுடன் தனது "சொந்த" தேசியப் போரின் முக்கியத்துவத்தை மெச்சிப் பாராட்டுகிறது. விரோதியைத் தோற்கடிப்பதற்கே முனைவதாயும், பிரதேசங்களைக் கவர்ந்து பிடித்துச் சூறையாடுவதற்காகவன்றி, தன் சொந்த மக்கள் தவிர மற்ற எல்லா மக்களின் "விடுதலைக்குப்” பாடுபடுவதாயும் உறுதியாகக் கூறுகிறது.
தொழிலாளர்களைப் பிளவுறுத்தி அவர்களை ஒருவருக்கொருவர் எதிராகப் போரிட நிறுத்தவும் அனைத்து நாடுகளையும் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கம் எவ்வளவு அதிகக் கடுமையாக முயல்கிறதோ இந்த உன்னத நோக்கத்திற்காக அது ராணுவச் சட்டத்தையும் ராணுவத் தணிக்கை முறையையும் எவ்வளவு அதிக மிருகத்தனமாக அமுல் செய்கிறதோ (இப்போதும் கூட போர்க் காலங்களில் இந்த நடவடிக்கைகள் வெளிநாட்டு விரோதிகளை விட அதிகக் கடுமையாக "உள்நாட்டு" விரோதிகள் மீது பிரயோகிக்கப்படுகின்றன) அந்தளவுக்கு அதிகமாக வர்க்க உணர்வுள்ள தொழிலாளி வர்க்கம் அதன் வர்க்க ஒருமைப்பாட்டையும் அதன் சர்வதேசியவாதத்தையும் அதன் சோஷலிஸ்டுத் துணிபுகளையும் எல்லா நாடுகளிலுமுள்ள "தேசபக்த" முதலாளித்துவக் கும்பல்களின் கட்டற்ற தேசிய இனவெறியை எதிர்த்துப் பாதுகாத்துக் கொள்வதைத் தமது மிக அவசரக் கடமையாகக் கருத வேண்டும். வர்க்க உணர்வுடைய தொழிலாளர்கள் இந்த நோக்கத்தைக் கைவிடுவார்களானால் அவர்கள் தமது, சோஷலிஸ்டு அபிலாஷைகளைக் கைவிடுவது ஒருபுறமிருக்க சுதந்திரம் மற்றும் ஜனநாயத்திற்கான தமது அபிலாஷைகளைக் கூடத் துறந்தவர்களாவார்கள்.
பிரதான ஐரோப்பிய நாடுகளின் சோஷலிஸ்டுக் கட்சிகள் இந்தக் கடமையை நிறைவேற்றத் தவறி விட்டன என்பதை மிகவும் கசப்பான ஏமாற்ற உணர்வுடன் நாம் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இந்தக் கட்சிகளின் தலைவர்களின், குறிப்பாக ஜெர்மனியில் இருப்பவர்களின் நடத்தை சோஷலிச லட்சியத்திற்கு அப்பட்டமான துரோகம் செய்வதாக இருந்தது. இந்த ஒப்புயர்வற்ற வரலாற்று முக்கியத்துவமுள்ள சமயத்தில், இன்றைய இரண்டாம் சோஷலிஸ்டு அகிலத்தின் (1889-1914) பெரும்பாலான தலைவர்கள் சோஷலிசத்திற்குப் பதில் தேசியவாதத்தை மாற்றீடு செய்கிறார்கள். அவர்களது நடத்தையின் விளைவாக, இந்த நாடுகளின் தொழிலாளர் கட்சிகள் அரசாங்கங்களின் குற்றகரமான போக்கினை எதிர்க்கவில்லை. மாறாக, தொழிலாளி வர்க்கம் தனது நிலையினை ஏகாதிபத்திய அரசுகளின் நிலையோடு ஒருமைப்படுத்திவிடுமாறு கேட்டுக் கொண்டன. போர்க்கடன்களுக்கு ஆதரவாக வாக்களித்தும், "தமது சொந்த" நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் தேசிய இனவெறி ("தேசபக்த") கோஷங்களை மீண்டும் வலியுறுத்தியும், போரை நியாயப்படுத்தியும் தாங்கி ஆதரித்தும் போரிடும் நாடுகளின் முதலாளித்துவ அரசாங்கங்களில் சேர்ந்து கொண்டும் இத்தியாதி முறைகளில் எல்லாம் அகிலத்தின் தலைவர்கள் சோஷலிசத்திற்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள். இன்றைய ஐரோப்பாவின் ஆகச் செல்வாக்குடைய சோஷலிஸ்டுத் தலைவர்களும் சோஷலிஸ்டுப் பத்திரிகைகளில் ஆகச் செல்வாக்குடைய ஏடுகளும் தேசிய இனவெறி-முதலாளித்துவ, மிதவாதக் கருத்துக்களைக் கொண்டவையாக உள்ளன. எவ்வகையிலும் சோஷலிசக் கருத்துக்களைக் கொண்டவையாக இல்லை. இவ்வாறு சோஷலிசத்தினை இழிவுபடுத்துவதற்கான பொறுப்பு பிரதானமாயும் ஜெர்மன் சமூகஜனநாயகவாதிகளையே சாரும். இவர்கள்தான் இரண்டாம் அகிலத்திலுள்ள ஆக வலிமைவாய்ந்த, ஆகச் செல்வாக்குடைய கட்சியாவர். ஆனால் பிரெஞ்சு சோஷலிஸ்டுகளையும் எவரும் நியாயப்படுத்திக் காட்ட முடியாது. அவர்கள் தமது நாட்டுக்குத் துரோகம் விளைத்து கம்யூனை நகக்குவதற்காக பிஸ்மார்க்குடன் சேர்ந்து கொண்ட அதே முதலாளித்துவ வர்க்கத்தில் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டார்கள்.
அதன் மூலம் அவர்கள் ருஷ்ய ஜாராட்சியை எதிர்த்துப் போராடுவதாக வாதம் செய்து போரைத் தாம் ஆதரிப்பதை நியாயப்படுத்த ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய சமூக-ஜனநாயகவாதிகள் முயல்கிறார்கள். இத்தகைய நியாயப்படுத்தலை ருஷ்ய சமூக-ஜனநாயகவாதிகளான நாம் படுமோசமான குதர்க்கவாதம் என்றே கருதுவதாகக் கூறுகிறோம். நமது நாட்டில் ஜாராட்சியை எதிர்த்துப் புரட்சி இயக்கம் கடந்த சில ஆண்டுகளாகப் பிரம்மாண்டமான அளவுகளை எட்டியுள்ளது. இந்த இயக்கத்துக்கு ருஷ்யாவின் தொழிலாளி வர்க்கம் எப்போதும் தலைமை தாங்கி வந்துள்ளது. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்ட அரசியல் வேலைநிறுத்தங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளன. அவை ஜாராட்சியை வீழத்துவோம் ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவோம் என்ற கோஷத்தை முன்வைத்தன போரின் தருவாயில் இரண்டாம் நிக்கலாயிடம் விஜயம் செய்த பிரெஞ்சு குடியரசின் தலைவர் பாயின்கரே பீட்டர்ஸ்பர்க் தெருக்களில் ருஷ்யத் தொழிலாளர்கள் போட்டிருந்த தடையரண்களைத் தாமே காண முடிந்தது. ஜாரின் முடியாட்சி என்ற அவக்கேட்டை மனித குலத்திடமிருந்து ஒழித்துக் கட்டுவதற்காக ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் எந்தவொரு தியாகம் செய்யவும் பின்வாங்கவில்லை. ஒருசில நிலைமைகளின் கீழ் ஜாரிசத்தின் வீழ்ச்சியைத் தாமதப்படுத்தும் ஏதேனும் இருக்குமானால், ருஷ்ய ஜனநாயகம் முழுவதையும் எதிர்த்தப் போராட்டத்தில் ஜாராட்சிக்கு உதவக்கூடிய ஏதேனும் இருக்குமானால் அது தற்போதைய போரேயாகும். இந்தப் போர் பிரிட்டிஷ் பிரெஞ்சு மற்றும் ருஷ்ய முதலாளித்துவ வரிக்கத்தின் பணப்பைகளை ஜாராட்சி பயன்படுத்துவதற்கு வழங்கி அதன் பிற்போக்கு நோக்கங்களை ஊக்குவிக்கிறது. ஜாராட்சியை எதிர்த்த ருஷ்யத் தொழிலாளி வரிக்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தைத் தடங்கல் செய்யும் ஏதேனும் இருக்குமானால், அது ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய சமூக-ஜனநாயகத் தலைவர்களின் நடத்தையேயாகும் இதை ருஷ்யாவிலுள்ள தேசிய இனவெறிப் பத்திரிக்கைகள் நமக்கு ஓர் உதாரணம் என்று தொடர்ந்து எடுத்துக்காட்டி வருகின்றன.
அனைத்துப் புரட்சிகரச் செயல்பாட்டையும் தவிர்க்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகும் அளவுக்கு ஜெர்மன் சமூக-ஜனநாயகம் பலவீனமாக இருந்தது என்று பாவித்துக் கொண்டாலும் கூட அது இந்த தேசிய-இனவெறி முகாமில் சேர்த்திருக்கக் கூடாது. ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகள் பாட்டாளி வர்க்க அகிலத்தின் பதாகையினை அவமதிக்கிறார்கள் என்று கூற இத்தாலிய சோஷலிஸ்டுகளுக்கு முகாந்திரம் அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கக்கூடாது.
நமது கட்சி, ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சி, போரின் தொடர்பாக மாபெரும் தியாகங்களைப் புரிந்துள்ளது. தொடர்ந்து புரியவும் செய்யும். நமது தொழிலாளி வர்க்கத்தின் சட்டபூர்வமான பத்திரிக்கைள் முழுவதும் அடக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தொழிலாளி வர்க்கச் சங்கங்கள் கலைக்கப்பட்டுவிட்டன; பெருமளவிலான நமது தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், நமது நாடாளுமன்றப் பிரதிநிதிகள்-டூமாவில் இருக்கும் ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் குழுவினர் போர்க் கடன்களுக்கு வாக்களிக்காமல் இருப்பது தமது தவிர்க்கவியலா சோஷலிஸ்டுக் கடமை என்று கருதினார்கள். தமது கண்டனத்தை மேலும் அதிகமான வலிமையுடன் வெளியிடுவதற்காக டூமாவில் இருந்து வெளிநடப்புக்கூடச் செய்தார்கள். ஐரோப்பிய அரசாங்கங்களின் கொள்கை ஏகாதிபத்தியக் கொள்கை என்று முத்திரை இட்டுக் காட்டுவது தமது கடமை என்று கருதினார்கள். ஜாரின் அரசாங்கம் அதன் கொடுங்கோன்மையைப் பதின்மடங்கு அதிகரித்துவிட்ட போதிலும் ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர்கள் போரை எதிர்த்துத் தமது முதலாவது சட்டவிரோத அறிக்கைகளை ஏற்கெனவே வெளியிட்டு வருகிறார்கள். இதன் வழி ஜனநாயகத்துக்கும் அகிலத்துக்குமான தமது கடமையினை ஆற்றி வருகிறார்கள்.
இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சி புரட்சிகர சமூக ஜனநாயகவாதிகளுக்குப் புண்படுத்தும் மானக்கேட்டை விளைத்துள்ளது. இவர்கள் ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளிடையே சிறுபான்மையையும் நடுநிலைமை நாடுகளில் நேர்த்தி மிக்க சமூக-ஜனநாயகவாதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். பிரிட்டனிலும் பிரான்சிலும் இருக்கும் சோஷலிஸ்டுகள் பெரும்பாலான சமூக-ஜனநாயக கட்சிகளின் தேசிய இனவெறியினை எதிர்த்துப் பேசி வருகிறார்கள். அதேபோழுதில் நீண்ட காலமாக தேசிய- மிதவாத நிலை மேற்கொண்டு வந்துள்ள ஜெர்மன் Sozialistische Monatshefte யால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சந்தர்ப்பவாதிகள் இயல்பாகவே ஐரோப்பிய சோஷலிசத்தின் மீது ஈட்டிய தமது வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் சந்தர்ப்பவாதத்திற்கும் புரட்சிகர சமூக-ஜனநாயகத்துக்கும் இடையே ஊசலாடும் (ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சியில் உள்ள "மத்தியினர்" போன்றோர்) நபர்களும், இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியை மறைத்து அல்லது அதை ராஜதந்திரச் சொல்லடுக்குகளால் போர்த்தி வைக்க முயலும் நபர்களும் பாட்டாளி வர்க்கத்துக்குப் படுமோசமான சேவை புரிகிறார்கள்.
இதற்கு நேர் மாறாக, இந்த வீழ்ச்சியைப் பகிரங்கமாக அங்கீகரிக்க வேண்டும். இதன் காரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களின் ஒரு புதிய மேலும் நிரந்தரமான சோஷலிஸ்டு ஒற்றுமையினைக் கட்டுவதைச் சாத்தியமாக்க முடியும்.
சந்தர்ப்பவாதிகள் ஷ்டுட்கார்ட், கோப்பன்ஹேகன் மற்றும் பாஸெல் காங்கிரசுகளின் முடிவுகளைத் தகர்த்து விட்டார்கள். இந்தமுடிவுகள், எல்லா நிலைமைகளிலும் எந்த ஒரு நிலைமையிலும் தேசிய இனவெறியை எதிர்த்துப் போராடுவது அனைத்து நாடுகளின் சோஷலிஸ்டுகளின் கடப்பாடு என்று சாற்றின; முதலாளித்துவ வர்க்கத்தாலும் அரசாங்கங்களாலும் துவங்கப் பெற்ற எந்த ஒரு போரையும் எதிர்த்து, உள்நாட்டுப் போர் மற்றும் சமுதாயப் புரட்சிக்கு ஆதரவான தீவிரமான பிரச்சாரம் மூலம் பதிலிறுப்பது சோஷலிஸ்டுகளின் கடப்பாடு என்றும் பணித்தன. இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சி சந்தர்ப்பவாதத்தின் வீழ்ச்சியாகும். இந்தச் சந்தர்ப்பவாதம் இப்போது கடந்து சென்று விட்டதான வரலாற்றுக் காலப் பகுதியின் ("சமாதான” காலம் எனப்படும்) முனைப்புக் கூறுகளில் இருந்து தோன்றியதாகும். இது அண்மை ஆண்டுகளில் அகிலத்தின் மீது நடைமுறையில் மேலாதிக்கம் செலுத்தி வந்தது சோஷலிசப் புரட்சியினை நிராகரித்தும் அதனிடத்தில் முதலாளித்துவச் சீர்திருத்தவாதத்தை மாற்றாக வைத்தும், சில சமயங்களில் தவிர்க்க முடியாத வகையில் உள்நாட்டுப் போராக மாறத்தக்க வர்க்கப் போராட்டத்தை நிராகரித்தும் வர்க்க ஒத்துழைப்பைப் பிரச்சாரம் செய்தும் தேசபக்தி மற்றும் தாயகத்தின் பாதுகாப்பு என்ற வேடத்தில் முதலாளித்துவத் தேசிய இனவெறியைப் பிரச்சாரம் செய்தும் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையால் நீண்ட காலம் முன்பே முன்வைக்கப்பட்டதான உழைப்பாளிகளுக்கு தாயகம் என்பதில்லை என்ற சோஷலிசத்தின் அடிப்படை மெய்மையை நிராகரித்தும் அனைத்து நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதிரான அனைத்து நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போரின் அவசியத்தை ஏற்பதற்குப் பதிலாக ஓர் உணர்ச்சிப் பகட்டான அற்பவாதக் கருத்தோட்டத்தின் அளவுக்கு இராணுவ வெறியை எதிர்த்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தியும், முதலாளித்துவ நாடாளுமன்ற வாதத்தையும் முதலாளித்துவச் சட்டபூர்வத் தன்மையையும் அவசியாமாகப் பயன்படுத்துவதை ஒரு குருட்டு வழிபாடாக்கியும் நெருக்கடிகள் நிறைந்த காலங்களில் சட்டவிரோத வடிவங்களிலான நிறுவனமும் பிரச்சாரமும் அவசர அவசியம் என்பதை மறந்தும் -இவ்வொறெல்லாம் இந்த வீழ்ச்சிக்குச் சந்தர்ப்பவாதிகள் அடிப்படையான தயாரிப்புகளை நீண்ட காலமாகச் செய்து வந்தார்கள். சந்தர்ப்பவாதத்திற்கு இயல்பான "துணைச் சேர்க்கையான” - பாட்டாளி வர்க்க, அதாவது மார்க்சியக் கருத்துக்கு முதலாளித்துவக் கருத்துப் போன்று அதே அளவு பகைமையானதான-அராஜக-சின்டிகலிசப் போக்கும் தற்போதைய நெருக்கடியின்போது தேசிய இனவெறிக் கோஷங்களைச் சற்றும் குறையாத வெட்கக்கேடான சுயமகிழ்வான முறையில் மீண்டும் வற்புறுத்திக்கூறுகிறது.
சந்தர்ப்பவாதத்தோடு தீர்மானமாக முறித்துக் கொள்ளாமல், அதன் தவிர்க்க முடியாத படுதோல்வியை மக்கள் திரளுக்கு விளக்கிக் கூறாமல் இன்றைய கட்டத்தில் சோஷலிசத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாது தொழிலாளர்களின் உண்மையான சர்வதேசிய ஒற்றுமையை அடைய முடியாது.
ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சமூக-ஜனநாயகவாதிகளின் முதன்மையான பணி அந்த நாட்டின் தேசிய இனவெறியை எதிர்த்துப் போராடுவதாகும். ருஷ்யாவில் இந்தத் தேசிய இனவெறி முதலாளித்துவ மிதவாதிகள் ("காடேட்டுகள்"), நரோதியவாதிகளில் ஒரு பகுதி சோஷலிஸ்டு புரட்சியாளர்கள் வரை மற்றும் "வலதுசாரி" சமூக-ஜனநாயகவாதிகளை ஆட்கொண்டு விட்டது. (குறிப்பாக, எ.ஸ்மிர்னோவ், பி.மாஸ்லவ் மற்றும் கி.பிளெஹானவ் ஆகியோரின் தேசிய இனவெறிக்கூற்றுக்களை இழிவுபடுத்த வேண்டும். இவை முதலாளித்துவ "தேசபக்தப்" பத்திரிக்கைகளால் எடுத்துக் கொள்ளப்பட்டு விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றன.)
போரிடும் தேசங்களின் இரு பிரிவுகளில் வைத்து எதன் தோல்வி சோஷலிசத்திற்குக் குறைந்த தீங்கு என்பதை சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் நோக்கு நிலையிலிருந்து நிர்ணயம் செய்வது தற்போதைய நிலையில் சாத்தியமல்ல. ஆனால் ருஷ்ய சமூக-ஜனநாயகவாதிகளான நமக்கு ஆக அதிக எண்ணிக்கையிலான தேசங்களையும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலுமான ஆகப் பெரிய மக்கள் திரளையும் ஒடுக்கி வரும் ஆகப் பிற்போக்கான காட்டுமிராண்டித்தனமான ஜாரின் முடியாட்சி தோல்வியுறுவது, ருஷ்யாவின் அனைத்து தேசங்களின் தொழிலாளி வர்க்கம் மற்றும் பாடுபடும் மக்கள் திரளின் நோக்கு நிலையில் இருந்து குறைந்த தீங்காகும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
ஐரோப்பாவின் ஐக்கிய நாடுகளின் ஒரு குடியரசின் உருவாக்கமே ஐரோப்பிய சமூக-ஜனநாயகவாதிகளின் உடனடியான அரசியல் கோஷமாக இருக்க வேண்டும். தேசிய இனவெறியின் பிரதான நீரோட்டத்துக்குள் பாட்டாளி வர்க்கத்தை இழுப்பதன் பொருட்டு எதை வேண்டுமானாயினும் "வாக்களிக்கத்" தயாராக இருக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு நேர் எதிரான முறையில் இந்த கோஷம் ஜெர்மன் ஆஸ்திரிய மற்றும் ருஷ்ய முடியரசுகளைப் புரட்சிகரமாக வீழ்த்தாத வரை முற்ற முழுக்கப் பொய்யானது, பொருளற்றது என்பதை சமூக-ஜனநாயகவாதிகள் விளக்கிக் கூற வேண்டும்.
ருஷ்யா மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாலும் அதன் முதலாளித்துவப் புரட்சியை இன்னும் முழுமை செய்யாததாலும், அந்த நாட்டிலுள்ள சமூக-ஜனநாயகவாதிகள் முன் நிலையுறுதியான ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கான பின்வரும் மூன்று அடிப்படையான நிலைமைகளைச் சாதனையாக்கும் பணி உள்ளது; ஒரு ஜனநாயகக் குடியரசு (அனைத்து தேசங்களுக்கும் முழுமையான சமத்துவம் மற்றும் சுயநிர்ணய உரிமையுடன்), நிலச் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், எட்டு மணிநேர வேலைநாள். ஆனால் முன்னேறிய நாடுகள் அனைத்திலும் போர் சோஷலிஸ்டுப் புரட்சி என்ற கோஷத்தை நாள் நிகழ்ச்சி நிரலில் வைத்து விட்டது. பாட்டாளி வர்க்கத்தின் தோள்களில் போரின் சுமை எத்தனை கனமாக அழுத்துகிறதோ அந்த அளவுக்கு இந்தக் கோஷம் அவசரமானதாகி விட்டது. பெருவீத முதலாளித்துவத்தின் நிலைமைகளில் அளப்பரிய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் இன்றைய "தேசபக்த" காட்டுமிராண்டித்தனத்தின் பயங்கரங்களுக்குப் பிறகு ஐரோப்பாவை மறு நிர்மானம் செய்வதில் அதன் எதிர்காலப் பாத்திரம் மேலும் செயலூக்கமுள்ளதாக இருத்தல் வேண்டும். பாட்டாளி வர்க்கத்தைத் தளையிட்டு அடக்கப் போர்க் காலச் சட்டங்களை முதலாளித்துவ வர்க்கம் பயன்படுத்துகிறது. எனவே பாட்டாளி வர்க்கம் சட்டவிரோதமான கிளர்ச்சி மற்றும் நிறுவன வடிவங்களை உருவாக்கிக் கொள்வது அவசர அவசியமாகி விட்டது. தமது துணிபுகளுக்கே நம்பிக்கைத் துரோகம் செய்யும் அளவுக்கு சட்டபூர்வ நிறுவனங்களைச் சந்தர்ப்பவாதிகள் "பேணிப் பாதுகாக்கட்டும்" - புரட்சிகரச் சமூக-ஜனநாயகவாதிகள் நிறுவன ஒழுங்கமைப்பு அனுபவத்தையும் தொழிலாளி வர்க்க உறவுப் பிணைப்புகளையும் சோஷலிசத்திற்கான சட்டவிரோதமான வடிவங்களை நெருக்கடிக் கால கட்டத்திற்குப் பொருத்தமான வடிவங்களை உருவாக்கப் பயன்படுத்துவார்கள்; தொழிலாளர்களை அவரவரது நாடுகளின் தேசிய இனவெறி முதலாளித்துவ வர்க்கத்தோடு ஒன்று சேரவிடாமல், நாடுகளில் தொழிலாளர்களுடன் ஒன்றிணைப்பதற்கு இவற்றைப் பயன்படுத்துவார்கள். பாட்டாளி வர்க்க அகிலம் தோல்வியுறவில்லை. நிச்சயமாகத் தோல்வியுறாது. தடைகள் எல்லாம் எவ்வாறிருந்த போதிலும், தொழிலாளர் பெருந்திரள் ஒரு புதிய அகிலத்தைப் படைக்கும் சந்தர்ப்பவாதத்தின் தற்போதைய வெற்றி அற்பாயுசானது. போர் எந்தளவுக்கு அதிகமாக தியாகங்களை திணிக்கிறதோ அந்த அளவுக்கு தொழிலாளர் பெருந்திரள், சந்தர்ப்பவாதிகள் தொழிலாளர் லட்சியத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதையும் ஆயுதங்கள் ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதிராகத் திருப்பப்பட வேண்டும் என்பதையும் அதிகத் தெளிவாகத் தெரித்துக் கொள்ளும்.
இன்றைய ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்பது மட்டுமே சரியான கோஷமாகும். இது கம்யூனின் அனுபவத்தைப் பின் தொடர்ந்து வருகிறது. பாஸெல் தீர்மானத்தில் (1912) உருவரை செய்யப்பட்டது; உயர் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலான ஓர் ஏகாதிபத்தியப் போரின் அனைத்து நிலைமைகளாலும் ஆணையிடப்பட்டதாகும் குறிப்பிட்ட எந்தவொரு தருணத்திலும் இந்த மாற்றம் எதுவரை இடர்ப்பாடானதாகத் தோன்றிய போதிலும், போர் இன்று செயலுண்மையாகி விட்ட நிலையில் இந்தத் திசை வழியில் சோஷலிஸ்டுகள் முறையான உறுதியான, பிறழாத தயாரிப்புப் பணியினை என்றுமே விட்டுவிடாமல் செய்தல் வேண்டும்.
இந்தப் பாதையின் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கம் தேசிய இனவெறி முதலாளித்துவ வர்க்கத்தின் மீதான சார்பு நிலையை உதறித் தள்ளி ஏதாவதொரு வடிவில் கிட்டத்தட்ட துரிதமாக தேசங்களின் மெய்யான சுதந்திரத்தை நோக்கியும் சோஷலிசத்தை நோக்கியும் தீர்மானகரமாக நடவடிக்கை எடுக்க முடியும்.
அனைத்து நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் தேசிய இனவெறி மற்றும் தேசபக்தியை எதிர்த்த தொழிலாளர் சர்வதேசச் சகோதரத்துவம் நீடூழி வாழ்க!
சந்தர்ப்பவாதத்திலிருந்து விடுபட்ட பாட்டாளி வர்க்க அகிலம் நீடூழி வாழ்க!
ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் கமிட்டி
நூல் திரட்டு, தொகுதி 26.
பக்கங்கள் 15-23
1914 செப்டம்பர் 28 (அக்டோபர் 11)க்கு முன்னால் எழுதப்பட்டது
சொத்ஸியால் டெமக்ரட் இதழ் 33, 1914 நவம்பர் 1 ல் வெளியிடப்பட்டது.